*கடுதாசி*
நடுநிசி நேரத்துல
நானுந்தான் உறங்கல
கடுதாசி வரும்வரை
கதவையும் திறக்கல
என்னெஞ்செ புரிஞ்சவரே
எழுதுங்கக் கடுதாசி
மின்னஞ்சல் வேணாங்க
மின்னலாய் மறைஞ்சுடுமே
வாசக் கதவை மூடிவிட்டு
வாசிப்பேன் உன் கடுதாசி
நேசக் கதவை திறந்துவச்சு
நெஞ்சுக்குள்ளே பூட்டிவச்சு
மண்ணுக்குள் உழுதாக்கி
மறைச்சு வச்ச விழுதாக்கி
எண்ணத்தை எருவாக்கி
என்னையே கருவாக்கி
கடுதாசி பூ தந்தாய்
காகிதப் பூ ஆனாலும்
தொடுநேசிப்பு உணர்ந்தேனே
தொடரும் மன வாசனையில்..
கண்ணுக்குள் வாழுமென்
கண்ணான மச்சானே
பெண்ணுக்குள் மறைஞ்சுள்ள
பொக்கிசமாய் வச்சானே
உண்”மை”யால் நிரப்பிய
உன்கடுதாசி என்பேனா
உண்மையில் மனசாய்
உள்ளதென காண்பேனா?
அழியாத காகிதம்
அதுவென் இதயம்
கிழியாத அதன்மேலெ
கிறுக்கினாய் உன்கடிதம்
அழியாத ஓவியம்
அழகான காவியம்
விழியோர முத்தம்
விழிக்கும் உணர்வின் சத்தம்
உன்கடுதாசி கவிதை
உள்ளத்தினுள் விதை
உன்கடுதாசி கதை
உரசி உணர்வூட்டும் சதை!
படுதாயின்னு பரிதாபமாய்ப்
பாடுவதாய்ப் படிக்கின்றேன்;
கடுதாசி என்னோடு
கதறுவதாய்த் துடிக்கின்றேன்!
தூக்கத்தைக் கலைச்சுப்புட்டு
தூரத்தில் இருப்பவரே!
ஏக்கத்தை விதைச்சுப்புட்டு
ஏனுங்க கடுதாசி?
பாயும் பழமும்
பார்த்தென சிரிக்குது
நோயும் நோவும்
நித்தமுமென அரிக்குது
கடுதாசி வேகத்திலெ
கடிதாக வாங்க மச்சான்
படுத்தாலும் தூக்கமில்லா
பரிதாபம் ஏங்க மச்சான்?
–
*“கவியன்பன்” கலாம்,* *அதிராம்பட்டினம்*