*திருக்குறள் தேசிய நூலாகுக*
ஒப்பிலாஎம் திருக்குறளே தேசியத்தின் நூலாய்
.. உடன்பட்டு ஏற்பதுதான் ஆள்வோரின் கடனாம்
செப்பிடும்செம் மொழிகளிலே சிறந்தவொரு நூலாம்
.. செழுமைபெறும் நல்வழியால் சிறக்கவொரு நூலாம்
இப்புவிக்குப் போதுமென ஏற்றவர்கள் உரைப்பார்
.. இம்மகிழ்ச்சி உலகத்தில் வேறெங்கு முண்டோ?
அப்பழுக்கே இலாவாழ்க்கை அமைந்திடவே அறங்கள்
.. அளிக்கின்றத் திருக்குறள்தான் தேசியத்தின் நூலே!
அறமுரைக்கும் திருக்குறளை அனைவருமே கற்க
.. அகிலமொழி யனைத்திலுமே மொழிபெயர்ப்புச் செய்து
சிறப்புறவே அதிலுள்ள கருத்துரைகள் உணர்ந்து
.. செய்கின்ற நம்வாழ்க்கை முறையொழுக்க நெறியாம்
திறன்வியந்துப் போற்றுகிறார் உலகப்பேர் அறிஞர்
.. திக்கெல்லாம் இதன்பெருமைத் திகழவைக்க வேண்டும்
மறந்துவிடா வண்ணம்சொல் லடுக்குகளாய்க் கோக்கும்
.. மனனத்தில் ஏற்றிவைக்கும் மகத்தான நூலே!
ஒன்றுபடும் சமுதாயம் உருவாக வேண்டி
.. ஒருவழியைக் காட்டுவதால் தேசியத்தின் நூலாய்
நன்றுபலப் பேசுகின்ற அறிஞர்கள் கூடி
.. நாடாளு மன்றத்தில் சட்டங்கள் தீட்ட
இன்றுவரை எம்மவர்கள் முயலாமை எண்ணி
.. இகழ்கின்றாள் தமிழன்னை என்பதையும் கண்டு
என்றுவரும் நற்செய்தி என்றுநாமும் கேட்க
..எவரிதனை முடித்துவைப்பார்ச் சொல்லுங்கள் இன்றே
*”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்*