…. — ச.ப. சண்முகம். 1
கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ச.ப.சண்முகம், எழுவாம்பாடி
******************************************************************
இயற்பெயர்: ச.ப.சண்முகம்.
திருவண்ணாமலை மாவட்டம்
போளுர் அடுத்து எழுவாம்பாடி கிராமம்.
தந்தையார் :பச்சையப்பன்
தாயார்: சரஸ்வதியம்மாள்
துணைவியார்:உஷாராணி
இரண்டு மகன்கள்.
எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து முதுகலை வணிகவியல் முடித்துள்ள கவிஞர் ச.ப.சண்முகம் , ஆரம்ப காலகட்டங்களில் சில செய்தித்தாள் புத்தகங்களில் கவிதைகள் எழுதி வந்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு கடைசியில் முகநூலில் பயணித்த பின்பே தனது புதுக்கவிதைகள்,ஹைக்கூகள் ,தன்முனைக் கவிதைகள் என எழுதிக் குவித்துள்ளார்.
இவரது ஹைக்கூ கவிதைகள் இயற்கையை கருப்பொருளாகக் கொண்டு இயல்பான நடையில் எழுதப்பட்டவை. ஹைக்கூ உலகம் முகநூலிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். நமது உலகத் தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தில் இவரது உயிரோட்டமான ஹைக்கூ கவிதைகள் அனைவராலும் பாராட்டுதல்கள் பெற்றன.
எளிய குடும்பத்தில் பிறந்து தமிழ் ஹைக்கூ கவிதைகள் வரலாற்றில் தடம் பதித்துள்ள இவரை உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றத்தின் சார்பாகவும் அனைத்து நிர்வாகிகள் சார்பாகவும் மனதார வாழ்த்துகிறோம். படைப்பு குழுமத்தில் இவருக்கு சிறப்பு விருது அண்மையில் வழங்கப்பட்டது. பல்வேறு இலக்கிய அமைப்புகளிலும் விருதுகள் பெற்றுள்ளார்.
அண்மையில் கம்போடியா நாட்டில் உலக தமிழ்க் கவிஞர்கள் மாநாட்டில் “வானம் தொடும் வண்ணத்துப்பூச்சிகள்” தன்முனைக் கவிதைகள் நூல் வெளியீட்டுவிழாவில் 52 கவிஞர்கள் தொகுப்பில் இவரது தன்முனைக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு.
மேலும் மேலும் ஹைக்கூ கவிதைகளும் தன்முனைக் கவிதைகளும் புதுக்கவிதைகளும் படைத்து நெடிது வாழ வாழ்த்துகிறோம் .
……….கா.ந.கல்யாணசுந்தரம்
நிறுவுநர், உலகத்தமிழ் ஹைக்கூ கவிஞர்கள் மன்றம்
மற்றும் நிர்வாகிகள்.
இவரது சிறந்த ஹைக்கூ கவிதைகளை இங்கே பகிர்வதில் மகிழ்கிறோம்….
- பறவை தரையிறங்க
சற்றுத் தள்ளி அமர்கின்றன
சருகுகள்.
- மழைக்குப் பின்
பாதையின் இருபுறமும்
ஒளிவீசும் புற்கள்.
- சாளரத்துக் கம்பியின்
நிழலில் இருக்கும்
பல்லியின்மேல் கருங்கோடு.
- தேங்கிய நீரை
தொட்டுத் தொட்டு ரசிக்கிறது
பறக்கும் செந்நிறத் தும்பி.
- மழையில் கிடந்த
சவுக்கு கொம்பை எடுக்கையில்
கைகளில் கரையான்கள்.
- அந்த பறவையின்
கால்களின் பிடியில்
கோபுர கலசம்.
- தேங்கிய நீரைக்
கடக்கும் சிறுமியின் கைகளில்
அறுந்த காலணி.
- நிசப்தமான இந்த இராப்பொழுதை
உடைத்து விட்டுப் போகிறது
ஏதோவொரு பறவை.
- புத்தனின் பார்வை
கோணலாகிப் போகிறது
சிற்பியின் உளி.
- பளிச்சிடும் மின்னலைக் காண
சிறு நாழிகை இருளாகிறது
பேரண்டம்.
ச.ப.சண்முகம்
எழுவாம்பாடி.
தொடரும் ….கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர்கள் ….