உயிரும் மெய்யும்
கலந்திருக்கும்
உன் புன்னகை மொழி …!
இசைக்கருவிகள்
மழலை ஒலி முன்னே
மண்டியிடுகின்றன!
மலர்கள்
இதழ்களை விரிக்கின்றன
உன் சுவாசத்தை
அவைகளின் வாசமாக்கி
வசப்படுத்திக் கொள்ள..!
அல்லும் பகலும்
அழகூட்டும் உன் விழிகளால்
விண்மீன்கள் வெட்கித்துத்
தோல்வியை ஒப்புக்கொள்கின்றன..!
கருவறையில் நீ பெற்றக்
கதகதப்பை உன்னிடம்
காற்றும் கடன் கேட்கும்
விஞ்சும் பட்டு மேனியைக்
கொஞ்சம் தொட்டுப் பார்க்கக்
கெஞ்சும் மலர்த்தோட்டம்!
ப்ரசவத்தில் கதறினாள்
உன் தாய்
நீ பிறந்ததும் அவள்மீது
பட்ட உன் பார்வையால்
பட்டெனப் புன்னகைச் சிதறினாள்
தாயின் மயக்கம் தீர்த்த
சேயே, மருத்தவச்சி நீயே!
துன்பத்திற்குப் பின்னர்
இன்பம் எனும் தத்துவம்
புரிய வைத்த புத்தகம் நீ!
அற்புதங்கள் காட்டும்
இறைவனின் பேரற்புதம் நீ!
உன் புன்னகை இதழ்களில்
தேன் உண்ணத் துடிக்கின்றன
வையகத்தின் வண்ணத்துப் பூச்சிகள்!
அம்மா அழகென்றால்
நீ “அம்மா” என்றழைப்பதில்
அழகும் அழகு பெறுகின்றது;
தமிழும் அழகு பெறுகின்றது! .
முத்தமெனும்
முத்திரை பதிக்க
சின்னம் தான்
கன்னம்
நித்தமும் அதில்
முத்தமிட்டாலும்
செல்லுபடியாகும்
திண்ணம்
நாவெனும்
உமிழ்மை
எழுதுகோல்
வரையும்
அன்பெனும்
மடல்கள் உன்
இதழ்கள்
இதயமெனும்
இணையத்தினை
திறக்க உதவும்
கடவுச்சொல்
உனது பெயர்ச்சொல்
மின்னஞ்சலின்
மின்னல்
வேகத்தினையும்
மிஞ்சும் உன்
கன்னக் குழி
புன்னகை மொழி
மிருதுவான உன் உடலே
விசைப்பலகையாய்
அசைத்திடும் என் விரல் பட்டதும்
இசைத்திடும் இனிய பாடலே
மழலை மொழியிலே
பஞ்சு பாதங்கள் பட்டதும்
நெஞ்சின் பாரங்கள் விட்டதும்
பிஞ்சு மருத்துவரின்
அக்குபஞ்சர் வைத்தியமோ
அடம்பிடித்தும் அழுகின்ற நீயே
படம்பிடித்தால் சிரிக்கின்றாயே
உதைக்கின்றாய் உன்காலால்
கதைக்கின்றாய் உன்மழலையால்
விதைக்கின்றாய் பாசத்தை
அதையே சொல்வோம் கவிதை என்றே…
அரும்பு சிரித்தால் பூமணம்
அதனாலே சுற்றிலும் உள்ளவர்கள் ஆவலுடன்
அணைப்பர் நெஞ்சில் ஒருகணம்
குழலின் ஓசையாய்க் குழைவு
குறைகளெல்லாம் மறக்கடித்து நெருங்கத்தான்
கூப்பிடும் உன்றன் விழைவு
திராட்சைக் கருவிழி அசைவால்
தீர்ந்துபோகும் துன்பங்கள் துயரங்கள் எல்லாமே
ஈடிலா மழலை இசையால்
பேசும் சித்திரக் கவிதை
பேசாமல் நீயிருந்தால் எங்கட்குக் கவலையாகும்
பேரின்ப ஊற்றாம் குழந்தை
உன்றன் கிறுக்கல் ஓவியம்
உன்னிடத்தில் உறைந்திருப்பான் இறையவனும்
உன்றன் பாட்டுக் காவியம்
கன்னம் போதைக் கிண்ணம்
அமுதமாய்ச் சுரக்கின்ற அன்பென்னும் ஊற்றாக
அள்ளி தருவதுன் எண்ணம்
மின்னல் தோற்கும் சிரிப்பு
மீண்டும்நீ தரவேண்டி தவமிருக்கும்
எங்கள் நெஞ்ச விரிப்பு
-அதிரை கவியன்பன் கலாம்,